உங்கள் எல்லோரையும் பற்றி எனக்கு இத்தகைய உணர்ச்சிகள் எழுவது இயற்கைதானே! ஏனெனில், நான் சிறையில் இருந்தபொழுதும், நான் நற்செய்திக்காகப் போராடி அதை நிலைநாட்டிய பொழுதும், என்னுடனிருந்து எனக்குக் கிடைத்த வரத்தில் பங்குகொண்ட நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்.
இதை நீங்கள் அறிய வேண்டும் என விரும்புகிறேன். கிறிஸ்துவுக்காக நான் சிறைப்பட்டது அரண்மனைக் காவற்படையினர் அனைவருக்கும் மற்ற யாவருக்குமே நன்கு தெரியவந்தது.
மற்றவர்களோ கட்சி மனப்பான்மையால் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர். அவர்களுடைய நோக்கம் நேர்மையானதன்று. என் சிறை வாழ்வின் வேதனையை இன்னும் மிகுதியாக்க நினைக்கின்றனர்.
அதனாலென்ன ? அவர்களுடைய நோக்கம். வஞ்சகமானதோ, நேர்மையானதோ; எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகின்றார். அது எனக்கு மகிழ்ச்சியே ஆம், இனியும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
என்ன நேரிடினும் நான் நிலைகுலைய மாட்டேன். 'இது வரையில் என்னால் கிறிஸ்துவின் புகழ் விளங்கியதுபோல் இப்பொழுதும் நான் இருந்தாலும் இறந்தாலும் என்னால் அவரது புகழ் விளங்கும். இதுவே என் பேராவல். இதுவே என் நம்பிக்கை
இந்த உறுதியில் நான் ஒன்று அறிவேன்: நான் இன்னும் உயிரோடிருந்து நீங்கள் விசுவாசத்தில் வளர்ச்சிபெற்று மகிழ்ச்சி காணும்படி உங்கள் அனைவரோடும் தங்கியிருப்பேன்.
ஆனால், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கை நடத்துங்கள்: நான் உங்களை வந்து பார்த்தாலும், வரமுடியாமல் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் நீங்கள் நற்செய்தியின் மேலுள்ள விசுவாசத்திற்கே ஒரே உள்ளத்தோடு போராடி, ஒரே மனதாய் நிலைத்து நிற்கிறீர்கள் என்பதும்.
எதிரிகள் முன் சிறிதும் மிரளாமல் இருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரிய வேண்டும். இவ்வாறு நீங்கள் மிரளாமல் இருப்பது அவர்களுடைய அழிவுக்கும் உங்களுடைய மீட்புக்கும் அறிகுறியாகும். இது கடவுளின் செயல்.
எனக்குள்ள போராட்டமே உங்களுக்கும் உண்டு. எனக்கிருந்த போராட்டத்தை நீங்கள் அன்று கண்டீர்கள். இன்னும் நான் அதில் ஈடுபட்டிருப்பது உங்கள் செவிக்கு எட்டியுள்ளது.